வெள்ளை இரவு

by

மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த
இந்த வெள்ளை இரவின் ஒளி
இருளிலிருந்து நம்மை
வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது

நீ/நான்/ஞானம்/குற்றம்/பசி
என 
நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில்

நீ என்பது எப்போதும் போல 
பிடிக்க முடியாத காற்றும்

நான் எனப்படுவது
கனவுகளின் இருள் சூழ்ந்த தெருக்களில்
முப்பதாண்டுகளாக அலைந்து திரியும் 
கூடு திரும்பாப் பறவையும்

ஞானமென்பது 
குற்றம் வழிந்தோடும்
மற்றக் கண்ணும்

குற்றத்தின் காயமே புதிய ஞானமும் 

பசியெனப்படுவதோ தன் தெருப்பாடகனின்
இசைக் குறிப்பும்

என்பதாக

பழஞ் சொற்களின் பரவசத்தில் 
தன்னைத் தானே ஆலிங்கணம் செய்தபடி
ஆர்ப்பரிக்கிறது கவிதை