குருவிக் குஞ்சுக் கவிதை

by

நினைவின் இடது கழுத்தோரம்
ஒரு குருவியை வரைந்து முடிக்கிறது
மேகமூடிய ஒரு குளிர் காலை

உதிரும் மஞ்சள் இலைகளில் மோகித்து
நிறங்களை உதறித் துறந்தபடி
அது மெல்லச் சிறகசைக்கிறது

ஆங்காங்கே உதிர்ந்து விழும்
பிஞ்சு இறகுகள் முழுக்க
கருப்பு வெள்ளையாலான இலையுதிர்காலக் கனவொன்றின் வாசனை.

குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடியுடன்
காதோரம்
"மீட்டப்பட்ட யாழின் சந்தம்
உன் மீது படர்ந்திருக்க வந்திருக்கிறேன்"
என்றபடி
கவிதை முழுக்கத் தன் சிறகை விரித்தபடி நுழைந்து
குருவிக் குஞ்சுக் கவிதையெனத் தன்னிச்சையாகப் பெயரும் சூட்டிக் கொள்கிறது.

கவிதைக்குள் நுழையவே முடியாது போன
இந்தத் தடவை
கடைசி வரியில் கடைசிச் சொல்லென வந்தமர்ந்து
ஓய்வெடுக்கிறது
நான்.