மற்றொரு சொல்லெனப் பசி நெளியும் கவிதை

by


மழையின் பெருந்துளிகளெனத் தூறியபடியிருக்கும்
இந்த முன்னிரவைச் சூழ்ந்திருக்கும் 
இருளைப் புகையச் செய்து 
காகிதத்தின் ஓரத்தில் ஒரு படமாக்கி முடிக்கிறேன்.

படத்தினுள்ளிருந்து நானெனப்படும் ஒளியினுஷ்ணம்
ரிதங்களுடன் அசையத்தொடங்குகிறது.

கழற்றியெடுக்கப்பட்ட மற்றொன்றின் முகம் 
இனி அணிவிக்கப்படத் தேவையில்லாதது தானென
காலக்கோட்டின் மேல் தன் குறிப்பை
எழுதிவைத்துவிட்டு மறைகிறது.

வலிந்து அணிவிக்கப்பட்ட முகங்களுக்குள்ளிருந்து
வீசுவதும் 
அதே உஷ்ணமான ஒளிதானென்ற பாடலுடன்
எனக்குள்ளிருந்து வெளியேறிய தெருப்பாடகன் 
தன் தோற்கருவியைத் தட்டியபடி நடக்கிறான்

பசியே அவனின் இசையாயிருக்கிறது

அவனின் நீண்ட அங்கியின் மேல் 
புழுதிக் கறையெனவும் பசியே படிந்திருக்கிறது

இனிப் பசியினதும் புழுதியின் நிறமே என
உச்சஸ்தாயியில் அந்தப் பாடல் முனகியபடி நீள்கிறது

அதே முன்னிரவில் பழைய புகைப்படங்களின் இருளுக்குள்ளிருந்து 
ஒரு கீற்றெனத் தோன்றி மறைகிறது 
என்றென்றுமாய் என் மேல் படர்ந்து கிடக்கும் 
அதே பசியின் ஒளி.

(பெருந்துளிகளென முன்னிரவு தூறும் பொழுதுகளில்  
பசியெனப்படுவது;
நீ கிறங்கும் வியர்வை நெடி,
அதே பசியினது புழுதி வாசம்,
நீயறியாப் பெருஞ்சொல் யசோதரா)