அர்த்தமாகிய பெருங்கனவுக்குள்.. என்று பெயரிடலாமா என்று யோசிக்கிறேன்

என்னிலிருந்து விழும் சொற்கள் உதிர்ந்தேதான் விழுகின்றன என்பதாகவே அதிகம் ஏமாற்றப்படுகிறேன். நானென்பதோ அதிலிருந்து நிர்வாணம் கிடைக்கப்போகிறதென்ற  பெருங்கனவில் அல்லது அர்த்தமென்பது வெளிப்படப் போவதான பேராவலில் ஏமாந்தபடியே திரும்பத் திரும்ப சொற்களை அணிந்து கொண்டும் உடுத்திக் கொண்டும் இருக்கிறது.

நின் முத்தத்தின் சுடர் அதிகாலையெனப் புரிந்து கொள்ளப்படும் பொழுதில் இக்கவிதை எழுதப்படுகிறது

நின் சுடர் பரவும் வெம்மையான பொழுதெனவும் துளித் துளியென உருகிக் கொண்டிருக்கும் பாவத்தின் சொற்களாகவும் எழுதிவிடவா இப்போதினை? அறிந்து கொண்டதன் பாவத்திடம் நினக்கென்று சொற்கள் எங்ஙணம் இருந்திருக்க நியாயம்?

புரிய முடியாத கவிதையின் காதலி

என்னுடைய கவிதைகளைப் புரிய முடியாதவளாகவும் கோபம் கொண்டவளாகவும் இரண்டாயிரத்து நானூற்றிப் பத்தாவது தடவையும் காதலி இருந்தாள். நானும் வழமை போல “எனக்கும்தான்” என்று உண்மையைக் கூறி அவளை ஆற்றுப்படுத்த விழைந்தேன்.

யசோதரா!!!

கோபத்தில் தூக்கியெறியப்பட்ட இரண்டாவது வார்த்தை யசோதராவுடையது. (அது எவ்வாறெனில்…) கத்தரிக்கப்பட்ட இமைகளுக்குள்ளிருந்து கசிந்த புத்தபிரானின் மோகம் பட்டே யசோதராவென்னும் ஓவியம் அசையத்தொடங்குகிறது. (அதனால்)

நின் ஒளியோவியத்துடனான பயணத்தினைக் குறித்து வைக்கிறேன்

எழுத வாய்க்கும் மொழிகள் உதிர்வதும் முத்தத்தின் வாயில் நான் ஒரு புத்தகத்தைப் போல திறந்து கிடப்பதுமான நள்ளிரவின் மீது பயணம் சாத்தியமாகிறது.