Sunday, 8 January 2012
காதல் கதை
அறுந்து போன கனவுத்துண்டுகளில்
நான்கு சம அளவானவை நின் சிரிப்புத்துண்டுகளாகும்.
மெல்லக் கோபப்படுகின்ற இன்னொரு துண்டு பின்னிரவுக்குரியது.
அது ஈரலிப்பானதும்தான்.
பூச்சட்டிக்குள் வைத்து பதியம் வைத்து சிதறிய நின்றன் புன்னகைத் துண்டுகளை வளர்த்துப்
பெரும் மரமாக்கலாமென்ற எண்ணமே என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
நீ விரும்பும் மீமெய்க் கதைகளால்
தன்செயலெண்ணித் தவிப்பதும் தீர்ந்துற்றிங்கு
இதை விடத் தெளிவாக நீ விளங்கிக் கொள்ளும் வண்ணம்
இன்னொரு காதல் கதையும் இருக்கிறது.
உன்னுடைய தலை மயிரை எண்ணை பூசிய மயிலிறகுடன் சேர்த்து
புத்தகமொன்றுக்குள் வைத்து
அது மூன்றாம் வானம் வரை நீண்ட பிறகு
அதைப் பிடித்து ஏறி ரெண்டு பேரும் ஓடிப் போவது..
நம்மைத் துரத்தி வருகிற கடந்த காலத்தின் நான்கள்
ஏற முடியாது சுமையில் வழுக்கி விழுந்துவிடும்.
மறந்துவிடாதே கர்த்தர் எனப்படும் ஈசா எனப்படும் மெசியா
இரண்டாம் வானத்தில்தான் இருக்கிறார்.
திரும்பி வரும்போது அவரை நம் குழந்தையென்று
கூட்டி வரலாம்.
ஏய் இனியும் இப்படி லூசுக் கதைகளெல்லாம் சொல்லி
உன்னை நித்திரையாக்க இயலாது.
கடந்து போகிற வயது கொடும் பாம்பு கண்மணி
ஈரமான இரவுகளில் மயிர் கூச்செறியும் உச்சி முனையில் கண்களைக் கொத்துகிறது.
No response to “காதல் கதை”
Post a Comment