Sunday, 27 February 2011

பலவாறும் உளறுவது

01. இருட்டோடு இருட்டாக எழுதி முடித்துவிடுவதுதான் நல்லது
வெளிச்சமான இரவுகளால் வன்புணர்ச்சி செய்யப்படுவதில்
எனக்கென்றால் இஷ்டமில்லை,
அவற்றில் சுகமும் கிடையாது

கரன்ட் இல்லாத இரவுகளின் சுகம் அலாதியானது தெரியுமா..
அவற்றின் இருண்ட சிதிலங்களுக்குள்ளாலிருந்து மீட்டெடுக்கப்படுகின்ற நான்
இதுவரை வரையாத விளக்கொளியின் கோடுகளாலெல்லாம்
என்னை வரைந்துகொண்டிருக்கிறது.

நீ யென்பது காரிருளில் திடீரெனப் பெய்கின்ற மழையாகவும்,
நானென்பது அப்போதுதான் துவட்டி முடிந்த மழையில் நனைந்த தலைமுடியாகவும்
கவிதை கவிதையாய் எழுதி வைப்பதற்கு இது நல்லநேரமில்லைதான்.
அவ்வளவு இருட்டு

02. பைத்தியம் முற்றிவிட்ட நான்
சிலுவையிலறையப்பட்ட நான்
ஏற்கனவே சொல்லிலடைக்கப்பட்டுவிட்ட நான்
நுளம்புத்திரிப் புகையினால் விரட்டியடிக்கப்பட சதிசெய்யப்பட்ட நான்
மங்கிய விளக்கொளியில் நித்திரையினை விடிய விடியத் தேடிக்கொண்டிருக்கிற நான்
என அது நீ அறிந்துகொள்ள முடியாத வேறு பலவாகவும் வகைப்படும்.

03. முகத்தில் நேர்த்தியுடன் செதுக்கப்பட்டிருக்கிற மயிர்க்கும்பம்
கடவுளாயிருந்ததின் பின்புறம் (அது இப்போது விலைக்கு விடப்படும் பருவம்)

இருட்டின் போதையில் வேறென்ன உளறலாம் என
கற்பனை செய்துகொண்டிருக்கிறேன்
மதுக் குவளையொன்றைக் கனவுகண்டதனையும் வலிந்து எழுதாது தவிர்க்கிறேன்.

தத்துவங்களைப் போல
அரசியலைப்போல
நேர்மையும் கொலைசெய்யப்படவேண்டிய துரோகிதான்
நம்பிக்கைத் துரோகி

விடிய விடிய இருட்டிடம்
இப்படியே தூங்குவதுபோல பாசாங்கு செய்வதாகவே உத்தேசம்

No response to “பலவாறும் உளறுவது”