Saturday, July 18, 2009

பயணக் குறிப்பு

நேற்றுப் பெய்த மழையில் பூத்தவைதான் இந்தப் பூக்கள்

அது மழைபெய்வதுபோலவும் இருக்கும் தூரங்களைப் பொறுத்து

ஒவ்வொரு மயிர்த்துளைகளுக்குள்ளிருந்தும்
ஒவ்வொரு மொட்டு மொட்டாக பூத்திருக்கிறது

உறைந்து கிடக்கிற காலங்களின் மீது
மரணம் மட்டுமே அசைகின்றதாக மாறிப்போய்விட்ட பின்னும்
பூக்கள் பூத்திருக்கிற மாதிரியான இன்பம்
என் மனம் முழுக்க நிரம்பியிருக்கும், ஒவ்வொரு பயணத்தின் போதும்

காதலியோ முத்தங்களோ பார்க்கில் புணர்ந்தபடி கிடப்பதோ
எதுவுமே தன்னை முந்திவிடாதபடி ஓருமையுடன்தான்
அது எல்லா யுகத்து மனிதர்களிலும் நிகழ்கிறது.

வானம் புதிது புதிதாய்த் திரள்வதும்
எதையுமே எழுதிட முடியுமான வெறுமையாய் என்னை தூர்த்து விடுவதும்
இந்தப் பயணம்தான்

என் காலங்களைத் தனிமையிடம் குதறக் கொடுக்காதிருக்க
பயணத்தால் எனக்கு உடுப்புத் தைத்துத்தாருங்கள் என்று
என்னைப் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறேன்

அது உயிரை விட வேகம் கொண்டதாக
என்னை விட்டும் தூரச் சென்றுவிடுகிறது
ஒவ்வொரு முறையும் எனது வீடு வந்துவிடுகிற போது..







ஓருமை : இட்டுமை அல்லது கடுமை என்று பொருள்பட எங்களது மொழியில் சொல்வதுண்டு