அந்தச் சம்பவங்களும் தொடர்ந்த அதன் முடிவுபற்றிய அறிவிப்பினதுமான விவரணத்தை எங்களின் குழந்தை இப்படிச் சொல்லுவாள்
'பிரபாகரன் உரத்த ஆளாம், குண்டுவெச்சி ஆக்கள கொல செய்யுறயாம், அதால மஹிந்த அங்கிள் ஆமியெல்லாம் அனுப்பி அவர சுட்டுட்டாங்களாம்,இனி எல்லாரும் சந்தோசமா வாழ்ந்தாங்களாம்"
நம்ப முடியாத ஒரு குழந்தைப் பிள்ளைக் கதைப் புனைவு போல தோற்றத்தில் நடந்து முடிந்து விட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனனினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் மீதான அரசின் வெற்றிஅறிவிப்பும் நாடு பூராகவும் இன்னமும் ஓயாத இதுவரை பெரும்பாலானவர்களுக்கு காரணமும் தெரியாத வெடில்களும், இனி சந்தோசமாக எல்லோரும் வாழ்வது மட்டும்தான் எஞ்சியிருக்கின்ற ஒரேயொரு நிகழ்வு என்பது போலவுமாக ஒரு வகையான தீர்மானிக்க முடியாத குழப்பமொன்றுக்குள் இலங்கையின் சிறுபான்மைச் சமுகங்கள் குறிப்பாக முஸ்லிம் சமுகங்கள் மாட்டியிருக்கின்றன என்றே கருதத் தோன்றுகிறது.
அதைவிடவும் இனி இலங்கையில் சிறுபான்மை என்பதே கிடையாது என்கின்ற ஒரு திடீர் அடையாள மறுப்பும் அதற்கான பிரதியீடாக அதிமேதகு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் புதிய இலங்கையென்ற சொற் பயன்பாடும் பல கேள்விகளைத் தொக்கிவிடுகின்றன என்பது மறுப்பதற்கில்லை.
வெள்ளைக்கார நாடுகளின் தீர்வுத்திட்டங்கள் இலங்கைச் சமுகங்களில் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகளாக முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒரு தனியான இன அடையாளம் கொண்ட சமுகம் என்ற நிலையில் வைத்து நமது குரல்கள் செவியேற்கப்படவில்லை,அல்லது நாம் குரல்கொடுக்கவேண்டிய எல்லாச் சந்தர்ப்பங்ளிலுமே அம்மம்மண்டிகளாக இருந்திருக்கிறோம் ஆகிய இரண்டேயிரண்டு உண்மைகளாக இதுவரை கால அரசியல் தீர்வில் முஸ்லிம்களாகிய நமது நிலை என்பதனை மிக இலகுவாக வாசித்து முடித்துவிட முடியும்.
ஆனால் இந்த இரண்டு நிலைப்பாட்டையுமே எடுத்துவிட முடியாத ஒரு புதிய காலமாக அல்லது அரசியல் தருணமாக இந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொலை அறிவிப்பும், நாட்டுக்கு விடுதலை கிடைத்துவிட்ட மாதியான ஒரு தீர்மானிக்க முடியாத உள நிலைக்குள் சமுகங்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கின்றதுமான இந்த அரசியல் தருணத்தின் பின் அமையவிருக்கிற இலங்கையின் அரசியல் வரலாற்றைச் சொல்லமுடியும்.
இன்னும் விளக்குவதாயின் தாங்கள் இதற்கு மேலும் அதே கையாலாகாத மௌனத்தினை நியாயப்படுத்த முஸ்லிம் பாராளுமன்ற பயில்வான்களுக்கு புதியதொரு பொய்யைச் சோடிக்க வேண்டிய தேவையும் வந்திருக்கிறது.
அது இருக்க இன்னும் ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் வடக்கினைத் துரித அபிவிருத்திசெய்வதாகவும் வடக்கு மக்கள் மீளவும் தமது நிலங்களில் குடியேற முடியும் எனவும் ஜனாதிபதி அறிவித்திருப்பதும் அதற்கான செயற்பாடுகள் அதே வேகத்துடன் ஆரம்பித்திருப்பதும் நமது செயற்பாட்டின் முக்கியத்துவத்தினை இன்னமும் தீவிரப்படுத்துகிறது.
எது எப்படியோ புதிய இலங்கை என்பதற்குள் வருகின்ற தீர்வு இலங்கைக்குள்ளிருந்துதான் வரும் என்ற ஜனாதியதியின் அறிவிப்பானது என்ஜீஓத் தனமான இதுவரைகால ஆளுங்கட்சிகளின் தீர்வு முயற்சிகளை விட ஒப்பீட்டளவில் நம்ப முடியுமான ஒரு அறிவித்தலாக எண்ண முடிகிறது.
அதே வேளை இத்தகைய ஒரு அரசியல் போக்கின் திருப்பத்தோடே நமது செயற்பாட்டுக்கான வெளியினை உறுதிமிக்க ஒன்றாக வடிவமைக்கவேண்டிய தேவையும் மக்களாகிய நமது ஒவ்வொருவரினதும் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் நாம் தவறிழைத்த
அரசியல் வரலாறு மிகத் தெளிவான ஊருப்படிகளாக முஸ்லிம் பாராளுமன்றப் பயில்வாகளின் தோற்றத்தில் கண்முன்னால் இருக்கிறது.
இப்படிச் சொல்லிவிடுவதானது பேச்சுவார்த்தைக்கு ஜப்பானுக்குப்போயிருந்து கொண்டு எத்தனை ஏக்கர் பற்pக்கப்பட்டிருக்கிறது, எத்தனை பேர் உயிர் இழந்திருக்கிறார்கள், எத்தனை போர் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்கிறார்கள் என்று டெலிபோனில் கேட்ட ரஊப் ஹகீமை
தொடர்ந்தும் ஏசிக் கொண்டிருப்பதாக அர்த்தமாகாது. அது நமது அரசியலின் இயக்கத்தினைப் புரிந்து கொள்ளாத செயற்பாடாகவும் அதுவே நம்மை ஒரு குறுகிய ஒழுங்குக்குள் கட்டமைத்துவிடுவதாகவும்
கூட மாறிவிடலாம்.
ஏனென்றால் மேற்கில் அதிகாரமும் அமைப்பியலும் எந்தளவு விரைவாக மதிப்பிழந்து போனதோ அதைவிடவும் துரிதமாக ஒரு வகை உணர்ச்சிகளால் வடிவமைக்கப்பட்ட இயக்க அரசியல், சீர்திருத்த குழுவாதம் போன்றனவும் மதிப்பிழந்து தலைவர் பிரதிநிதி போன்ற சொல்லாடல்களும் இலங்கை சிறுபான்மை அரசியலில் வலுவிழந்து விட்டன என்றுதான் நான் நினைக்கின்றேன்.
வெட்டினால் பச்சை இரத்தம் வருமளவு ஒரு சாதாரண கட்சி அரசியலானது மதமாக உருவேற்றப்பட்ட முஸ்லிம் உரிமைக்கான அரசியல் ஒரு மிகக் குறுகிய காலத்தோடே கலைந்து அர்த்தமிழந்து விட்டதனை இதற்கான எளியதொரு உதாரணமாகச் சொல்ல முடியும்.
ஏன் பிரபாகரனின் மரணத்தைக் கூட அதன் ஒரு அங்கமாகவே கொள்ள முடியும்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஸ்ரப் இருந்த போது முஸ்லிம் காங்கிரஸ், நமது கட்சி, மரம் போன்ற சொற்களின் மீது ஏற்பட்ட புனிதமான உணர்வு என்பது ரஊப் ஹகீமின் காலத்தில் ஒரு வகை விமர்சனமாக மாறுகிறது, இதனை காலமாறுதலில் அதிகாரம் வலுவிழந்திருக்கிறது என்பதாகவே நான் வாசிக்கிறேன்.
அத்தகைய காலத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகின்ற இன்றைய இலங்கையின் அரசியல் ஒழுங்கினைப் புரிந்து நமது சிந்தனைகளில் உள்ளெடுத்துக் கொள்ளாத வரைக்கும், நமது உரிமைக்கான, மக்களின் வாழ்வுக்கான தீர்வு என்பது இதுவரைகால வரலாறுபோல ஜனாதிபதி மஹிந் ராஜபக்ச சொல்ல வருகின்ற புதிய இலங்கை என்பதிலும் அதில் வரப்போகிற இனங்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டதத்திலும் சந்திகளில் வெடில்கொழுத்துவதற்கும் ஆயுளை நீடித்து துஆக் கேட்பதற்கும் மட்டுமான சமுகமாக பழக்கப்பட்டு விடுவோம் என்பது மிகவும் தெளிவானது.
( ஸ்பீக்கரை பயன்படுத்தும் தடை இல்லாமல் போன போது குனூத்தில் ஸ்பெசல் துஆ ஓதிவிடுவார்களோ என்று நான் பயந்துமிருக்கிறேன்)
இதனை இப்படியே தொடருவது நமது அரசியல் பாதையினையும் முஸ்லிம் காங்கரஸையும் மீளாய்வு செய்வதாகவே நீண்டு போகும்.
அது இப்பிரதியின் நோக்கமல்ல..
வேலுப்பிள்ளை பிரபாகனின் ஆயுத இயக்கத்தினாலும் அதன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆயுத அத்துமீறல்கள் ஒரு இனவெறியினை புலமாகக் கொண்டிருந்ததும் அத்தகைய ஒன்றின் வளர்ச்சிக்கான தோற்றுவாயாகக் காணப்பட்டமையும் இன்றுவரை நம்முடைய நான்காவது தலைமுறையையும் அதன் வடுக்களை அனுபவிக்கச் செய்துவிட்டிருக்கிறது.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பின்னர் கருவாகி இப்போது பாடசாலை போகும் நமது பிள்ளைகளின் பூர்வீகப்புலமும், ஒரு பெரும் பாரம்பரியமும் ஒரு முகாமுக்குள் சுருக்கப்பட்டே அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுகிறது என்பது ஜீரணித்துக் கொள்ளக் கடினமான துயர்.
இப்படியாக அதிகாரத்தோடு மிக இலகுவாகவே இணங்கிவிடுகின்றதும், வசதிகளையும் இலாபங்களையும் காணும் போது தனது மானத்தையும் கணக்கலெடுக்காத நமது பயில்வான்களின் பொருள்மைய சிந்தனையுமாகச் சேர்ந்து ஒரு சமுகம் அனுபவிக்க முடியுமான எல்லாத் துயர்களையும் சீரழிவுகளையும் முஸ்லிம் சமுகமாகிய நாம் அனுபவித்து வந்திருக்கிறோம் என்பது மறுப்பதற்கில்லை.
எதிர்க்கட்சியோடு தேர்தல் முடிவுவரை இருப்பதற்கும் முஸ்லிம் பாராளுமன்றப் பயில்வான்கள் சொல்லும் நியாயம் சமுகநலனும் உரிமையும்தான், அடுத்தநாள் ஆளுங்கட்சியோடு சேர்ந்து மந்திரியாகி உரையாற்றும்போதும் சொல்வது அதே சமுக நலன் உரிமை என்பதுதான்.
இது அவர்களின் நூறு வீத பிழையென்று சொல்லிவிட முடியாது,
ஏனென்றால் நமது அரசியல் வரலாற்றின் பாதை நான் மேலே சொன்னது போல ஒருவகையான மதவியலாகவே மக்களாகிய நமது சிந்தனையில் ஏற்றப்பட்டிருக்கிறது.
நாம் கட்சிக்காக நோன்பு நோற்றவர்கள் என்பதும் இதன் ஒரு அங்கமே.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இன்னமுமே இத்தகைய மாயைகளைத் தூண்டுகின்ற ஊக்கிகளாக இந்தப் பயில்வான்கள் தொழிற்படுவதும், அதை மிகக் கவனமாக தேர்தல்களின் போது பிரயோகித்து விடுவதும்தான்.
பழைய மனதையும் அதன் கிளர்வுகளையும் கோசங்களையும் மீளவும் நமக்குள் வரவழைத்து வாக்களித்து விட்டு நாம் சும்மா இருந்து விடுகிறோம்.
இதை நான் இப்படி எழுதி முடிப்பதனால் மட்டும் மாற்றிவிடவும் முடியாது.
இதற்கான மாற்றம் பற்றிய புதிய விதிகளும் அளவு கோல்களும் இனித்தான் விவாதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இது இத்தகைய கருத்தியல்களுக்கான அமைதியான பொழுதும் கிடையாது.
அவற்றில் நிறையவற்றை நமக்குள்ளான அடிப்படைவாத, தீவிரவாத விவாதங்களிலும் சீர்திருத்த இயக்க, அமைப்பியல் அரசியலுக்குள்ளும் வீணாகத் தொலைத்திருக்கிறோம்.
தவிர இந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நாம் இழந்திருக்கின்ற, உயிர்கள் நிலம் பூர்வீகம் என அத்தனையையும் சொல்லிக்காட்டுவதாக மட்டும் இந்தக் காலத்தை நாம் கடத்திவிடுவதும் அவசியமற்றது, மாறாக நாம் இழந்திருப்பவற்றை மீளப் பெறுவதற்கான உத்திகளையும் அதற்கான
மக்கள் அரசியல் வழிமுறையினையும் நோக்கிய ஒரு வேகமான செயற்பாடே மக்களாகிய நம்மிடமிருந்து வெளிவரவேண்டிய ஆயுதம் என்று நம்புகின்றேன்.
இது வரைக்கும் நாம் இது பற்றிக் கதைக்காததும் அத்தகைய நிலைக்கென நம்மைத் தயார்படுத்திக் கொள்ளாததும் கூட நம்மையறியாமல் நமக்குள் அழுத்திக் கொண்டிருக்கின்ற முன்னே கற்பிக்கப்பட்ட அரசியல் மதம் ஒன்றின் மீதிருக்கும் குருட்டுநம்பிக்கையின் எச்சங்கள்தான் என்பதாகக் கூட சொல்லுவதில் தவறிருக்காது.
பிரபாகரனை கொன்று புலிகளை வெல்லுவதில் ஜனாதிபதிகாட்டிய வேகம் நமது அவதானத்திற்குட்பட வேண்டியது, அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கின்ற தயார்படுத்தல்தான் நம்மிடம் அவசியம் தேவைப்படுகிறது.
அதிகாரத்துக்கு இணங்கிப்போதல் என்பதன்றி அதனோடு உரையாடுதல் என்பதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.
இங்கேதான் நமது அரசியல் மக்கள் மயப்படுத்தப்பபட்டதன் தன்மை பற்றியும் அதிகாரத்துக்கான அழுத்த சக்தியாக மக்களாகிய நமது குரல்களை மாற்றிக் கொள்வதன் சாத்தியம் குறித்தும் மீள ஒருதரம் சிந்திக்க முயல வேண்டியதன் அவசியம் இருக்கிறது
(இதற்கு முன்னரும் பல முற்போக்கு சிந்தனையாளர்கள் இத்தகைய உரையாடல்களைத் தொடக்கியதும், அவை வெறும் உள்ளுர் அரசியலுடன் அஸ்தமித்துப்போனதையும் இங்கு கவனத்தில் கொண்டு வருகிறேன் )
நாம் சிந்திக்க முன்னமேயே நல்லவைகளாக மதிப்பிட்டு வைத்திருக்கின்ற நமது எதிர்ப்பு முறைமைகள் மீதும், நாம் தீர்வுகளாக சொல்ல வருகின்ற சொற்பிரயோகங்கள் மீதும் கேள்வி கேட்க வேண்டியதும் அவற்றுக்கு வெளியில் வந்து உண்மையைச் சிந்திப்பதும் இதனோடு அவசியமான ஒன்றாகிறது.
எந்தவொரு சமுகப்பிரச்சினை அல்லது அரசியல் விமர்சனம் என எதற்கெடுத்தாலும் எல்லாரும் ஒற்றுமைப்படவேண்டும், தலைவர்கள் கட்சிபேதமின்றி சமுக நலனைப் பேச வேண்டும் , ஒரு மேடையில் ஒரு மேசையில் அமர்ந்து தீர்வு தர வேண்டும், சமுக நலனில் ஒன்றுபடவேண்டும் போன்ற இஸ்லாமிய இயக்கக் கருத்தியலின் தாக்கங்களைக் காணமுடியும்.
வெறும் உணர்ச்சிகளின் எழுத்தாக, கூட்டப் பிரகடனங்களாக இவை காற்றில் அழிந்தும் விடுகின்றன.
நமது அறிவுப் புலம் மிகவும் வளர்ந்ததும் பொருளாதாரத்துக்கான வழிமுறைகள் இன்னும் விரிந்தும் உரையாடல் என்பது இணையம் போன்ற வெளிகளுக்கூடாக விரிவுபட்டும் வருகின்ற இன்றை நாட்களுக்கும் இவை பொருந்திப்போகும் என்று நம்பிவிட முடியாது.
அதை விட இத்தகைய ஒரு கனவு பலித்து நமது அரசியலில் எந்தவொரு மாற்றம்தானும் நடந்ததாகவும் இல்லை.
அது மட்டுமன்றி நான் மேலே சொன்னது போல தலைவர் சேர் அல்லது மினிஸ்டர் என்பவரை முழுக்க எதிர்க்கின்ற நிலைப்பாடு கூட அவரை அதே புனிதமான நிலையில் வைத்து ஏற்றுக் கொள்வதன் விளைவே என்பதாகத்தான் பார்க்க முடிகிறது.
இது கூட நான் மேலே சொன்ன மதமாக ஊறியிருக்கின்ற அரசியலின் எச்சங்கள்தான்.
அதனால்தான் மக்களாகிய நமக்கு இதனை விதைத்து நம்மை தம்வசப்படுத்த இதனையே உத்தியாகக் கொள்ளும் அரசியல்வாதிகளை முஸ்லிம் பாராளுமன்றப் பயில்வான்கள் என்று தனிச் சொல்லினால் குறிப்பிடுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை திரும்பவும் இந்தப் மு. பா . பயில்வான்களை மிகவும் அறிவு பூர்வமாக விமர்சிப்பதோ, அவர்களுக்கு பொம்மைகளை எரிப்பதோ, அல்லது அவர்களோடு சேர்ந்து உணர்ச்சிவசப்படுவதோ இந்தத் தருணத்திற்கான ஒரு முன்னோக்கிய பாய்ச்சலாக இருக்கப் போவதில்லை.
முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் எல்லா அர்த்தங்களையும் அவர்கள் அழித்து விட்ட நிலையில் எதிப்பதான அல்லது
ஆதரிப்பதான எந்தவொரு மக்கள் தொடர்பாலும் நமக்கான தேவைகள் அவர்களுக்கூடாக நிறைவேறப் போவதில்லை.
அதற்கு மாற்றமான அழுத்த சக்திகளாக மக்களாகிய நாமும் நமது அமைப்பு சிறுவன இயக்கங்களும் வடிவமாற்றம் பெறவேண்டிய தேவையிருக்கிறது.
அதிலும் குறிப்பாக வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் மிகத் தீர்க்கமான கரிசனையும் மிகவும் திட்டமிட்ட அழுத்தங்களும் ஜனாதிபதிக்கும் அபிவிருத்திக் குழுக்களுக்கும் கொடுக்கப்படவேண்டியிருக்கிறது.
நமது நிலங்கள் பற்றிய மிகச் சரியான தகவல்கள் ஆவணங்கள் நமது நிறுவனங்களிடம் பல ஆய்வுகளாக ஓரளவு இருக்கின்றன.
நமது சொத்துக்கள் பற்றிய தரவுகளும் நம்மிடம் இருக்கின்றன.
எல்லாவற்றையும் விட துயரமும் அழுகையும் தழும்புகளும் நிரம்பவேயிருக்கின்றன.
இங்கே எஞ்சியிருப்பதாக நான் எண்ணுவதெல்லாம் நம்மையறியாமல் நம்முள்ளே இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வகையான தளை மட்டும்தான்.
அவைதான் நம்மை செயற்பட முடியாததாக இந்தப் பயில்வான்களை நம்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அதனை உடைத்து நமது பிரச்சினைகளை அதிகாரத்தோடு தெளிவாக உரையாடவும், முன்வைக்கவுமான ஆவணரீதியான, புள்ளிவிபர தயார்படுத்தல்களே மிகவும் அவசியமானவை.
இவற்றை மிகக் கவனமாக குறித்த தரப்புக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கேனும் இயக்கங்கள் நிறுவனங்களென வளர்ந்திருக்கின்ற நாம் நமது பலத்தினைத் திரட்டிக் கொள்ளவும் அவற்றை அதிகாரத்தின் மீதான அழுத்தங்களாக பிரயோகிக்கவும் வேண்டியிருக்கிறது.
நமது பூர்வீக நிலங்களுக்குள் மீளக் குடியேறுவதற்கும்,
நமது பழைய வாழ்வை அடைந்து கொள்வதற்குமாக நாம் செயற்படுகின்ற வெளியாக இந்தத் தருணத்தை ஆக்கிக் கொள்வது பற்றிச் சிந்திப்போம்.
புதிய அறிவுகளும் புதிய உரையாடல் வெளிகளும் பரந்து கொண்டிருக்கின்ற நம்முடைய இயங்கியலைப் புரிந்துகொள்வதனூடாகவும் நம்முள்ளான புனிதமான கட்டுக்களைத் தகர்த்து வெளியே வருவதனூடாகவும் இதனை மிக இலகுவாக நாம் வடிவமைத்துக் கொள்ளமுடியும் என்றுதான் இன்னமும் பிரார்த்தனைகளுடன் நம்பிக் கொண்டிருக்கிறேன்.