முதலில் குண்டு மணிகள் போல
விழத்தொடங்கிய போது
நான் அலட்டிக் கொள்ளவில்லை.
பிறகு துகள் துகளாக கொட்ட ஆரம்பித்ததிலிருந்து
பெரும் பெரும் வரிகளாக எனக்குள்
அவை விழுந்து நெளியத் தொடங்கின
அதில் நான் மெல்ல மெல்ல தூக்கிச் செல்லப்படுகிறேன்.
கீழே நிர்வாண மரங்களை
ஆழமான காதலுடன்
வானத்தின் தூதுவ ஆண்களும் பெண்களுமென
வெள்ளையாய் இறுகத் தழுவுகின்றனர்.
என் கைகள் நிரம்பப் பனி
என்னை ஆரத் தழுவியிருக்கிற மென்மையான கரங்கள்
உருவமழிந்து கரையத் தொடங்குகின்றன
கீழே மேகங்களும் தெரிகின்றன.
நான் மழையைக் கடந்து செல்கிறேன் போலும்.
என் மனம் முழுக்க நிரம்பி
உடலில் சிந்தி வழிகிறது பனி.
இப்போதெல்லாம் ஊரில் இருந்தது போல
விமானம் போய்த் துளைத்ததால் ஓட்டைவிழுந்து
மழையெல்லாம் பெய்வதில்லை
என்னுடைய வானம்
என்னை இறுகத்தழுவவும்
வெள்ளை இறகுகளாகி என்னை வருடி விடவுமாய்
அடிக்கடி இறங்கி வருகிறது
நிலம் முழுக்கப் பனி.
0 கருத்துக்கள்:
Post a Comment