Tuesday, August 25, 2009

தனித்திருத்தலின் கவிதை

மனிதமற்று வெறுவானதாகியிருக்கிற உலகத்தில்
உயிர்கொண்டலைகிற மற்றதுகள் பற்றிய
அச்சம் மட்டும் என்னைச் சுற்றியிருக்கிறது

ஆபிரிக்கக்காரிகளின் சுருண்டை முடிகள் போல
கலைந்து ஆற்றில் கிடக்கிற சுகம்
நிலவுக்கு முடிய எனது முறை

ஆறுகள் என்னை மறுத்துக் கொண்டிருக்கின்றன
மடியினையும் யோனியையும் பொத்திய படி

பண்டைய வரலாற்றுக் காலத்து கைவிடப்பட்ட அரச மண்டபமாய்
அறை முழுக்க தனிமையும்
பாழ்த்தனமும் குடிகொண்டிருக்கிற இந்த விடியச்சாம இருளில்
ஒட்டடைகள் அறுந்துவிடாத ஆண்டாண்டுகால சந்தத்தில்
என் அரியாசனம் ஆடிக்கொண்டேயிருக்கிறது.

நான் மட்டும் தனித்து வீற்றிருக்கிறேன்

எனது சித்தமே தன் பாக்கியமென எதிரே
பரிதாபமாய்க் குந்திக் கொண்டிருக்கிற லப்டொப் மீது
நிறுத்தாத கட்டளைகளாய்
எதிரொலித்த வண்ணமேயிருக்கிறது எனது அதிகாரத்தின் குரல்

ஒட்டடைகள் அறுந்துவிடாத ஆண்டாண்டுகால சந்தத்தில்
ஆடிக்கொண்டேயிருக்கிற என் அரியாசனத்தில்
நான் மட்டும் தனித்து வீற்றிருக்கிறேன்.

0 கருத்துக்கள்: