Saturday, July 5, 2008

உன் ஓரத்தில் நான்



உன்னைப் பார்த்துக்கொண்டும்
உனக்குக் கால் நீட்டிக் கொண்டும் மெல்ல இருக்கிறேன்

கால் மயிர்களுக்குள்
படலைபோல அப்பியிருக்கிறது மண்

இன்னொருமுறை
காலத்தின் எந்தப் பதிவிலுமே கேட்க முடியாததாக
நீ உன்னை இசைத்துக் கொண்டிருக்கிறாய்
புதிது புதிதான மொழிகளிலும் சந்தங்களிலும்
ஒரு கோணத்தில்
உலகத்தின் ஈரமான கீழுதடு போலவும் தெரிகிறாய் நீ

உன்னில் கால்கழுவி நடந்து வரும்போது
மண் அப்புவதை உணர்ந்து
நெஞ்சுக்குள் தானாய் இடிக்கத் தொடங்குகிறது

பல மாதங்களின் பின்னென்றாகிப் போன
உனதும் எனதும் உறவும் பிரிவும்
இப்டித்தானே நிகழ்கிறது இப்போது
உன்னைப் பிரிந்து எழுந்து செல்லப் போவதன் குறியீடுதானது
இனியென்ன செய்ய முடியும் காலத்தை
என்ற கைசேதத்தில்
நீ அலையாகி அடிப்பதாகவும்
தெரிந்தும் சடங்குக்காய் போகாதே என்பது போல
உப்புத் துளிகளை என் மீது தெறிப்பதாகவும் ஆறுதலுடன்
அடக்கிய பின் திரும்பப்பார்க்கக் கூடாத
மையத்துக்கான விதியையே
மனதுக்குள் உச்சரித்துக் கொண்டு
உன்னை விட்டும் எழும்பி நடந்து வருகிறேன்

நீயும் நானுமாகிய பொழுதின் அமைதிகளை
உனக்கருகில் அடக்கம் செய்த கனத்துடன்
உலகத்துக்குள் திரும்பவும்

Thursday, July 3, 2008

உறைவு


நாலே வருடங்கள் புணர்ந்ததும்
ஒரு பிள்ளை மட்டுமே பெற்றுக் கொண்டதுமான
யோனியையுடையவளாய்
பெருமூச்சையும் சேர்த்தே
நீள் கபுறுக்குள் அடக்கிவிட்டவள்

அவளின் இளமையைப் பற்றியோ
பற்றியெரிந்த ஏக்கங்கள் பற்றியோ
பீறிட்டு வரப்பார்த்த விரகம் பற்றியோ
குஞ்சி விறைக்காத காலம்
எதையுமே பேசாமல் நகர்ந்திற்று

இப்போது வருவதும் நின்றுபோயிருக்கும் அவளுக்கு
எல்லா உணர்ச்சிகளும் சேர்த்துத்தான்

மலைகளென உருவகம் செய்தெழுதிய
அவளின் விதவைத் துயர் பற்றிய காலத்துக் கவிதையெல்லாம் பிழையோவென்று தோன்றுகிறது இக்கணம்
அதையும் சுமந்து கடந்து விட்ட வலியும் திடமும்
அவள் கொண்டிருக்கும் நியாயத்தால்

இருபது வயதில் பிள்ளையிருக்கும் அவளின்
உம்மாத்தனத்தின் புனிதத்திலிருந்தே
வரலாறு அவள் பற்றி
முதலாவதாகக் கதைக்கத் தொடங்கலாமினி
அப்படியும் இல்லாமலும் போகலாம்

ஆயினும்
பெரும் பாறைக்கனத்துடன்
துணியோடு உறைந்து தீர்ந்த அவளின்
சுக்கிலத் துளிகளுக்கு நியாயம் தேடி
அவர்கள் வருவார்கள்

நீ முக்கியமாகத் தெரிந்து கொள்
அவர்களுக்காய் சூரியன் கலந்த இந்திரியம் செலுத்தப்பட்டிருக்கும்