Thursday, September 11, 2008

உன்னால் கலைந்த என் தூக்கம்

கட்டையான மீசையுடையவனும்
அயன்குலையாத ஜுப்பாவை அணிபவனுமாகியவனின்
ஆண்குறித்தனமாய்
உன்னை வழி முழுக்க
நிறுத்தி வைத்திருக்கிறது என் தேசம்.

நிலவிடம் பலவீனப்பட்டு விழுந்து
வீதி நெடுகக் கரைந்து கிடக்கிற இருளும்,
உன் தடுத்து நிறுத்தலில்
மோதிக் கலைந்து
மனம் முழுக்க சிதறிக்கிடக்கும்
நித்திரைத் துண்டுகளுமாக பயணிக்கிறேன்.

கடைசியாகவும் ஒன்பதாவதாகவும் சந்தித்த
நீயும் கூட
ஈரம் காய முன் அவசரமாகச் சுற்றி
சொப்பிங் பேக்குக்குள் வைத்த
என் ஜட்டிவரை பிரித்துப்பார்த்த பின்
என் தேசப்பற்றில் நம்பிக்கை கொண்டவனாய்
என்னை விட்டாய்

தூங்க முடியாமலேயே பிரிய நேர்ந்த
அந்தக் கடைசியிரவின் அலறல்
விடிகாலை கொழும்பில் வைத்து
இப்படிச் சபித்தபடி மறைந்து போனது

அமைதி பற்றியும், ஆழ்சயனம் பற்றியும்
உன் காதுகளுக்குள்
விடிய விடிய ஓதுபவனுகளை
செருப்பாலடிக்கக் கடவது



நன்றி:
கூராயுதம், தினகரன்

2 கருத்துக்கள்:

பஹீமாஜஹான் said...

அசரீரி

இந்த வழிமறிப்புகளிலும் சோதனைகளிலும் குற்றவாளிகள் அகப்பட்டுக் கொள்வதேயில்லை.
எல்லாமும் நடந்து முடிந்த இடத்தில் "பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக" செய்தி (எவ்வித கூச்சமும் இன்றி) சொல்கிறார்கள்.
சாமானியர்களைச் சங்கடப்படுத்துவதாகவே எல்லாச் சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவற்றில் உள்ள மிகப் பெரிய ஓட்டைகளைச் சட்டமியற்றுபவர்கள் கண்டுகொள்வதில்லை.

"அமைதி பற்றியும், ஆழ்சயனம் பற்றியும்
உன் காதுகளுக்குள்
விடிய விடிய ஓதுபவனுகளை
செருப்பாலடிக்கக் கடவது"

இப்படித்தான் எவ்வொருவரையும் வாழ்த்த வேண்டியிருக்கிறது

Farzan.ar said...

நித்திரையில் விரைத்திருந்த குறியையும் இருண்ட சோதனைச்சாவடி அறையில் வைத்து தட்டிப்பார்ப்பதும் இங்குதானே நடக்கிறது...

வழிநெடுக யாரை யார் நிறுத்தினர். எந்த தேசத்தில்? காகம் மலம் கழிக்கும் பொது கழிப்பிடம் வேண்டி அரசின் பணத்தில் அவர்களை அவர்களே நட்டுக் கொண்டர்.

காதுகளுக்குத்தான் இங்கு ஓதப்படுகின்றதே ஒழிய உள்ளங்களுக்கு எதுவும் ஓதப்படுவதில்லையே..செய்திகளைப் போல..