Saturday, July 5, 2008

உன் ஓரத்தில் நான்



உன்னைப் பார்த்துக்கொண்டும்
உனக்குக் கால் நீட்டிக் கொண்டும் மெல்ல இருக்கிறேன்

கால் மயிர்களுக்குள்
படலைபோல அப்பியிருக்கிறது மண்

இன்னொருமுறை
காலத்தின் எந்தப் பதிவிலுமே கேட்க முடியாததாக
நீ உன்னை இசைத்துக் கொண்டிருக்கிறாய்
புதிது புதிதான மொழிகளிலும் சந்தங்களிலும்
ஒரு கோணத்தில்
உலகத்தின் ஈரமான கீழுதடு போலவும் தெரிகிறாய் நீ

உன்னில் கால்கழுவி நடந்து வரும்போது
மண் அப்புவதை உணர்ந்து
நெஞ்சுக்குள் தானாய் இடிக்கத் தொடங்குகிறது

பல மாதங்களின் பின்னென்றாகிப் போன
உனதும் எனதும் உறவும் பிரிவும்
இப்டித்தானே நிகழ்கிறது இப்போது
உன்னைப் பிரிந்து எழுந்து செல்லப் போவதன் குறியீடுதானது
இனியென்ன செய்ய முடியும் காலத்தை
என்ற கைசேதத்தில்
நீ அலையாகி அடிப்பதாகவும்
தெரிந்தும் சடங்குக்காய் போகாதே என்பது போல
உப்புத் துளிகளை என் மீது தெறிப்பதாகவும் ஆறுதலுடன்
அடக்கிய பின் திரும்பப்பார்க்கக் கூடாத
மையத்துக்கான விதியையே
மனதுக்குள் உச்சரித்துக் கொண்டு
உன்னை விட்டும் எழும்பி நடந்து வருகிறேன்

நீயும் நானுமாகிய பொழுதின் அமைதிகளை
உனக்கருகில் அடக்கம் செய்த கனத்துடன்
உலகத்துக்குள் திரும்பவும்

1 கருத்துக்கள்:

பஹீமாஜஹான் said...

அசரீரி
அடிக்கடி உங்கள் பக்கத்துக்கு வந்து போகிறேன்.
சில கவிதைகளோடு எனக்கு உடன்பாடில்லை. சில கவிதைகளைப் பார்க்கும் போது அதற்கப்பால் என்ன சொல்வதென்று புரிவதில்லை.

எதிர்காலத்தில் நிச்சயமமாக இதைவிடவும் சிறப்பாக இயங்குவீர்கள் என்பதை எதிர்பார்க்க முடிகிறது.