Thursday, May 22, 2008

சிதைந்த கொலை நடந்த இரவின் கவிதையொன்று

காரணம் தெரியாமல் கொல்லப்படுகின்றதன் துயர எண்ணமாக
எந்தன் இரவு முறிந்து மண்டையில் விழுந்தது
வாழ்வு பற்றிய எல்லாம் நொறுங்கி
அடுத்தகணத்தின் நிச்சயமின்மையை தொடர்ந்தும் பிம்பப்படுத்தியபடி..

அது கொல்லப்பட்ட மன்சூர் நானாவாகவும்




அப்பாஸ் நானாவாகவும்



பாரூக் நானாவாகவும்



மனதுக்குள் சுத்திச் சுத்தி வந்து கொணடிருந்தது

அமைதிப்படுத்த எந்தக் காற்றும் அப்போது வரவில்லை

என் வாழ்வு முடியப் போவதான
நடுக்கத்தைப் போக்குமளவு
எந்த வலிய நம்பிக்கையும்
முறிந்து போன அப்பாதியிரவில் கிடைக்கவில்லையெனக்கு

அல்லாவறிய நான் எனக்கு சடலமாகவே தெரிந்தேன்
என் வாழ்வின் நிச்சயம் அந்தளவுக்கு ஆகிப்போனது
அக்கணம்

எனக்கும்,
பஸ்ஸில் ஊருக்குப் போகப் போகும் நண்பனுக்கும்,
அவர்களின் ஊரைக் கடக்கவிருக்கும்
நாளைமறுநாளைய அல்லது அதற்கு அடுத்தநாளைய
என் பக்கத்துவீட்டானுக்கும் நிகழப் போகும்
காரணம் தெரியாத அதே மாதிரியான சுடுதல் பற்றித்தான்
நெஞசுக்குள் இடிக்கத் தொடங்கியிருக்கிறது இப்போது

மன்சூர் நானா போல
அப்பாஸ் நானா போல
பாரூக் நானா போல அல்லது அதைவிடவும் கொடூரமாக
அது நடந்துவிடலாம்

வல்லாஹி பலா
அவர்களின் ரோஹை இஸ்ராயீல் வாங்குமட்டும்
அந்தக் காரணத்தைக் காற்று சொல்லவில்லை அவர்களுக்கு
ஏன் என்பதைச் சொல்வதற்கு அயத்துப் போன
மூத்தாப்பாவின் அந்த ஆயிரம் கதைகளோடு
இதுவும் ஒன்றாகிற்று பிறகு

ம்..ஹ்..ம்
வாப்பா வந்திறங்கிய வழியைத் தேடவே
நூற்றாண்டுகளாய் வக்கில்லாமல் கிடக்கும் வரலாற்றில்
இப்படி எழுதியெல்லாம் இனியொன்றும்
புதிதாக நடந்துவிடாது
சுட்ட பின்னர் கழுத்தைத் திருப்புதல்,
காணுக்குள் இழுத்துப் போடல் மாதிரியான
புதுப்புதுக் கொலைகளைத்தவிர

இனி வேறென்ன..
இருப்பும் உரிமையும் கோசமும் பணியாரமும்

அவர்களை
நீளமாய்த் தோண்டச் சொல்லுங்கள்
நம்மெல்லாருக்குமான மொத்தமான கபுறொன்றை

கிழக்கின் ஆறையும் கடலையும் தொங்கலாகக் கொண்ட நீளத்தில்


( 22-05-2008 அன்று ஆரையம்பதியில் வைத்து தமிழ் ஆயுதக் குழுவினால் -TMVP- அநியாயமாகக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சகோதரர்களுக்காக எழுதப்பட்டது. )

3 கருத்துக்கள்:

Fathah said...

Salam Asareeri

Rather using the word Tamil armed group - use TMVP - Its well known that they did it.

Kalaiyagam said...

Your poem is super.

-Kalaiyagam
http://kalaiy.blogspot.com

அசரீரி said...

நன்றி ஃபதாஹ் தவறைத் திருத்தியதற்கு